பெங்களூரில் கனமழை காரணமாக கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 2 தமிழர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் கடந்த வாரம் மழை வெளுத்து வாங்கிய நிலையில் தற்போது கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள் அனைத்தும் வெள்ளக்காடாக மாறியுள்ளன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பெங்களூரு பாபுசாபாளையத்தில் 6 மாடி கொண்ட அடுக்குமாடி கட்டடம் கட்டப்பட்டு வந்தது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் தொடர்ந்து பெய்து கொண்டிருந்த கனமழை காரணமாக நேற்று மாலை அந்த கட்டடம் நொடி பொழுதில் சரிந்து விழுந்தது. அப்போது கட்டட பணியில் ஏராளமானோர் ஈடுபட்டிருந்ததால் கட்டட இடிபாடுகளில் அவர்கள் அனைவரும் சிக்கினர்.
இதையடுத்து தொடர்ந்து மீட்பு பணிகள் அதிவேகமாக நடைபெற்று வருகிறது.21 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 8 பேர் கட்டட இடிபாடுகளில் சிக்கி சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும் பலர் கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதி மட்டும் அள்ளாமல் இந்தியா முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களில் 6 பேர் பீகாரை சேர்ந்தவர்கள் எனவும், சத்யராஜ், மணிகண்டன் ஆகிய 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர்களது உடல் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே கட்டட உரிமையாளர், ஒப்பந்தக்காரரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.